மனம் போன போக்கில்

மனம் பற்றிய புரிதலுக்கு பொதுவாக சொல்லப்படும் கதை ஒன்று. 

ஓர் அரசனுக்கு திடீரென்று இரண்டு கண்களும் குருடாகிவிடுகின்றன. மலைஉச்சியில் உள்ள சஞ்சீவி மலையில் உள்ள மூலிகையைக் கொண்டு வந்து பிழிந்தால் தான் அதைக் குணப்படுத்த முடியும் என்று சொல்லப்பட்டது. அந்த சஞ்சீவி மலைக்குச் செல்ல மலையடிவாரத்தில் உள்ள தேவதை வழிகாட்டினால்தான் முடியும்.

அந்த அரசனுக்கு மூன்று குமாரர்கள். அதில் முதலாமவன் "நான் கொண்டுவருகிறேன்' என கிளம்புகிறான். அவனுக்கு வழிகாட்ட தேவதை ஒரு நிபந்தனை விதித்ததாம்."நான் உன் பின்னால் வருவேன். நான் இடது பக்கம் திரும்பு என்றால் இடது பக்கம் திரும்ப வேண்டும். வலது பக்கம் திரும்பு என்றால் வலதுபக்கம் திரும்ப வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் நீ நடப்பதை நிறுத்தக்கூடாது. நடந்து கொண்டே இருக்க வேண்டும். எது நடந்தாலும் பின்னால் திரும்பிப் பார்க்கவே கூடாது' என்பதே அந்த நிபந்தனை.
முதலாமவன் நடந்து செல்ல தேவதை வழிகாட்டிச் சென்றது. திடீரென்று பின்னால் வரும் தேவதையின் சலங்கை ஒலி கேட்கவில்லை. "என்னாயிற்று?' என்று தன்னையறியாமல் முதலாமவன் திரும்பிப் பார்க்கிறான். நிபந்தனையை மீறிவிட்டதால் அவன் கற்சிலையாகிவிடுகிறான்.

அடுத்து இரண்டாமவன் கிளம்புகிறான். தேவதையின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கிட்டத்தட்ட பாதிதூரம் வந்துவிடுகிறான் அவன். திடீரென்று சிரிப்பொலி கேட்கிறது. ஆர்வம் மிகுதியால் திரும்பிப் பார்க்கிறான். அவனும் கற்சிலையாகி விடுகிறான்.

அடுத்து மூன்றாவது குமாரரின் முறை. அவனும் வருகிறான். இவனுக்கும் இதே நிபந்தனையுடன் தேவதை பின் செல்கிறது. இவனோ பின் வரும் சத்தம் நின்று போனாலும் முன்னே செல்கிறான். அவனுக்குப் பின்னால் கேட்கும் அலறல் சத்தம், சிரிப்பொலி இவற்றுக்கெல்லாம் திரும்பாமல் முன்னே... முன்னேறிச்சென்று வெற்றியும் பெற்று மூலிகையையும் கைப்பற்றுகிறான்.

இங்கே... இந்தக் கதையிலே பின்னால் வரும் தேவதைதான் நம் மனது. அது நம் ஒவ்வொருவருக்கும் நிபந்தனையை விதித்துவிட்டு, செயல் உறுதியைத் தடுக்க எல்லா முயற்சிகளையும் செய்யும். அதைப் புறக்கணிப்பதில், கண்டுகொள்ளாமல் பயணிப்பதில்தான் நம் வெற்றி அடங்கியிருக்கிறது.

Comments

Popular posts from this blog

On Children - Khalil Gibran

Let it go by Balu

கசப்பான உண்மை